Tuesday, April 23, 2024
   
Text Size

நாட்டு நிலைமைகள் சீராகி சமாதானமும் சகவாழ்வும் நிலவ அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்!

User Rating: / 0
PoorBest 

நாட்டு நிலைமைகள் சீராகி சமாதானமும் சகவாழ்வும் நிலவ முனைப்புடன் செயற்பட்டு அதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்!

இந்நாட்டில் முஸ்லிம்களாக வாழும் நாம் வரலாறு நெடுகிலும் பல சோதனைகளுக்கு முகங்கொடுத்து வந்துள்ளோம். இவற்றின்போது நாம் இஸ்லாமிய போதனைகளுக்கு ஏற்ப பொறுமையுடனும் நிதானமாகவும் செயற்பட்டு வெற்றிபெற்றுள்ளோம்.

சோதனைகளின் போது அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு செயற்படுவோர் தனக்கு ஏற்படும் பிரச்சினைகளிலிருந்து நிச்சயம் ஈடேற்றம் பெறுவர். நபிமார்களின் வரலாறு இதற்குச் சான்றாகும். எனவே, முஸ்லிம்கள் பெரும்பாவங்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதிலும் அல்லாஹு தஆலாவுடனான தமது தொடர்பைச் சீராக்கிக் கொள்வதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக சில தினங்களில் எம்மை வந்தடையவுள்ள றமழான் மாதத்தில் நாம் அதிகளவு நல்லமல்களில் ஈடுபட வேண்டும். நிச்சயமாக நமது நல்லமல்கள் முஸ்லிம்களுக்கு குறிப்பாகவும் நாட்டு மக்களுக்கு பொதுவாகவும் நிம்மதியையும் சுபீட்சத்தையும் கொண்டு வரும் என்பது உறுதியான விடயமாகும்.

தற்போது நிலவிவரும் அசாதாரண நிலைமைகள் காரணமாக முஸ்லிம்கள் சற்று அமைதியிழந்து காணப்படுகின்றனர். சிலர் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தை தூண்டும் செயற்பாடுகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர். ஒரு சமூகத்தை அச்சுறுத்தும் இவ்வாறான நடவடிக்கைகள், இந்நாட்டில் நிலவும் சமாதானத்தையும் சகவாழ்வையும் பாதித்து நாட்டின் அபிவிருத்திக்கு தடையாக அமைவதுடன், இந்நாட்டின் யாப்பு உறுதிப்படுத்தியுள்ள உரிமைகளை மீறும் செயற்பாடுகளாகவும் காணப்படுகின்றன.

எனவே, இந்நாட்டு முஸ்லிம்கள் இஸ்லாமிய போதனைகளைப் பேணி, இன ஐக்கியத்தையும் சமூக ஒற்றுமையையும் பாதுகாக்கும் வகையில் நடந்து கொள்ளுமாறும், இஸ்திஃபார், ஸதகா, நோன்பு, துஆ போன்ற நல்லமல்களில் ஈடுபட்டு அல்லாஹ்வின் பக்கம் திரும்புமாறும் குனூத் அந்நாஸிலா ஓதுவதற்கான ஜம்இய்யாவின் வழிகாட்டல்களுக்கு ஏற்ப ஐவேளை தொழுகைகளிலும் குனூத் அந்நாஸிலாவை றமழான் மாதம் வரை ஓதுமாறும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கேட்டுக் கொள்கின்றது.

அத்துடன் ஒவ்வொரு ஊரிலும் உள்ள உலமாக்களும் துறைசார்ந்தவர்களும் சமூகத் தலைவர்களும் ஒன்றிணைந்து இனவாதத்தை முறியடிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், பொது மக்களுக்கு இதுதொடர்பில் வழிகாட்டுமாறும் ஜம்இய்யா வேண்டிக் கொள்கின்றது.

நாட்டில் ஐக்கியம் மற்றும் சகவாழ்வு வளரவும் தீய சக்திகளின் மோசமான திட்டங்கள் தோல்வியுற்று அனைத்து சமூகங்களும் புரிந்துணர்வோடு வாழவும் எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் பாலிப்பானாக.

வஸ்ஸலாம்.

அஷ்-ஷைக் எச். உமர்தீன்

செயலாளர் - பிரச்சாரக்குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Login Form